சாலமன் தீவுகள் தனது நாட்டில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தளத்தையும் அமைக்க அனுமதிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதுடன், ஆஸ்திரேலியாவுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் மற்றும் சாலமன் தீவுகள் பிரதமர் மெத்தியூ வேல் ஆகியோர் கன்பராவில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன்படி, சாலமன் தீவுகளின் முக்கிய உட்கட்டமைப்புகள் இராணுவமயமாக்கல் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளிலிருந்து பாதுகாக்கப்படுவதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் பசுபிக் தீவுகள் மன்றத்தின் உறுப்பு நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதேவேளை, சீனாவுடனான 2022ஆம் ஆண்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் புதுப்பிக்காமல் காலாவதியாக அனுமதிக்க சாலமன் தீவுகள் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், சீனாவுடனான ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிட முடியாது என சாலமன் தீவுகள் பிரதமர் மெத்தியூ வேல் தெரிவித்துள்ளார்.
சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை, சாலமன் தீவுகளின் உள்நாட்டு அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான மனாசே சோகாவரே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.