ஆஸ்திரேலியாவின் முன்னணி பயண நிறுவனமான ‘Flight Centre Travel’ நிறுவனத்தின் வாடிக்கையாளர் தகவல்கள் சைபர் ஊடுருவல் மூலம் அணுகப்பட்டிருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் தரப்பு தங்குமிட முன்பதிவு கட்டமைப்பில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தால் கணிசமான எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனுமதியற்ற தரப்பினரால் அணுகப்பட்டிருக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, பெரும்பாலான பதிவுகளில் வாடிக்கையாளர்களின் பெயர்கள் மற்றும் பயணத் தொடர்பான அடிப்படைத் தகவல்கள் உள்ளடங்கியுள்ளன.
மேலும், குறைந்தளவிலான பதிவுகளில் கடவுச்சீட்டு விபரங்கள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள், பிறந்த திகதிகள் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் சுகாதாரம் அல்லது நடமாட்டம் தொடர்பான தகவல்களும் உள்ளடங்கியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வாடிக்கையாளர்களின் கடன் அட்டைகள், கொடுப்பனவு விபரங்கள் அல்லது வங்கிக் கணக்குத் தகவல்கள் அணுகப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக சைபர் பாதுகாப்பு நிபுணத்துவ நிறுவனமான Mandiant உட்பட வெளிப்புற நிபுணர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, Flight Centre நிறுவனத்தின் பங்குகளின் விலை ஆரம்ப வர்த்தகத்தில் 2.1 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.