தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை இன்று வெகுவிமர்சையாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிறந்தநாள் நிகழ்வுகள் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்படவுள்ளன.
அந்தவகையில், வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இடமான வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள காணியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, சிரேஷ்ட அரசியல்வாதி எம். கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்த பின்னர் அந்தப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப் பதாகை சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சேதப்படுத்தப்பட்டிருந்த அந்தப் பதாகை மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதுடன், அந்தக் காணி சுத்திகரிக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் அலங்கார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு இன்று முற்பகல் 10 மணிக்குப் பிறந்தநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.