ஆஸ்திரேலியாவில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, நடைபாதையில் சென்றுகொண்டிருந்த தந்தையையும் அவரது நான்கு வயது மகனையும் மோதிக் கொன்ற சாரதிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் நகருக்கு தெற்கே உள்ள லோகன் (Logan) பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் ட்ரெவர் கல்பிரைத் (Trevor Galbraith) என்ற 43 வயதுடையவருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரெஜன்ட்ஸ் பார்க் (Regents Park) பகுதியில் உள்ள கிரீன் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
33 வயதான பிரைடன் ஆஷ்லே டிம்மின்ஸ் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஹென்ட்ரிக்ஸ்-ஹெமி ஆகியோர் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக நடைபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, சாரதி செலுத்திய வாகனம் நடைபாதையில் ஏறி அவர்கள் மீது மோதியுள்ளது.
விபத்து இடம்பெற்றபோது சாரதியின் இரத்தத்தில் காணப்பட்ட மதுவின் அளவு, சட்டப்பூர்வ அனுமதி வரம்பை விட சுமார் நான்கு மடங்கு அதிகமாக இருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், வாகனம் செலுத்திக்கொண்டிருந்தபோது அவர் தனது கைத்தொலைபேசியில் வந்த செய்தியொன்றையும் பார்வையிட்டுள்ளார்.
விபத்துக்கு முந்தைய நாள் பிற்பகல் முதல் 30 இற்கும் மேற்பட்ட பியர் மற்றும் மதுபானக் கலன்களை அவர் அருந்தியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இரு உயிரிழப்புகள் தொடர்பில் ஆள்கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், பின்னர் போதையில் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
விசாரணையின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனது செயலுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கோரிய அவர், மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றம் மிகவும் பாரதூரமானது எனத் தெரிவித்த நீதிபதி, இரு குடும்பங்களும் நீண்டகாலம் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஏற்கனவே தடுப்புக் காவலில் கழித்த காலத்தையும் கருத்திற்கொண்டு, அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.