உக்ரைனில் ரஷ்யப் போரினால் மனரீதியான பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, அந்நாட்டு மருத்துவர்கள் மற்றும் மனநலப் பணியாளர்களுக்கு ஆஸ்திரேலியாவில் மூன்று மாத கால சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைனைச் சேர்ந்த எட்டு மனநலப் பணியாளர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் ஐந்து மனநல மருத்துவர்களும், மூன்று சமூகப் பணியாளர்களும் அடங்குகின்றனர். ஐந்து மருத்துவர்களில் நான்கு பேர் சிறுவர் மனநல மருத்துவ நிபுணர்களாவர்.
சிட்னியில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டத்தின் ஊடாக, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆதரவு வழங்குதல், மன உளைச்சல்களைக் கையாளுதல் மற்றும் சிகிச்சை வழங்கும் மருத்துவப் பணியாளர்களின் மனநலத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
2022ஆம் ஆண்டு உக்ரைன் போர் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சிட்னி மருத்துவ நிபுணர் டான்யா டஸ் இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். 2023ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மருத்துவர்களில் ஒருவரான மரியா சுக்மானோவ்ஸ்கா, உக்ரைனில் படையினர், முன்னாள் போர்க் கைதிகள் மற்றும் போர் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றார்.
ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த காலம் தமக்கு புத்துணர்ச்சியையும், மீண்டும் பணிக்குத் திரும்புவதற்கான மனவலிமையையும் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, உக்ரைனின் டினிப்ரோ நகரில் பணியாற்றும் சிறுவர் மனநல மருத்துவர் மரியா மவ்ரோபுலோ, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து வரும் நிலையில், அவுஸ்திரேலியாவில் கிடைத்த அனுபவம் தமது சொந்த மனநலப் பாதிப்புகளையும் புரிந்துகொள்ள உதவியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பயிற்சியை நிறைவு செய்த எட்டு பேரும் மீண்டும் உக்ரைனுக்குத் திரும்பி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் சேவைகளை வழங்கவுள்ளனர்.
இந்த மருத்துவர்களின் பயிற்சியை நிறைவு செய்து வழியனுப்பும் நிகழ்வில், அவுஸ்திரேலியாவின் கோல்டேல் சமூகத்தினர் பங்கேற்றதுடன், உக்ரைனுக்கான முதலுதவிப் பெட்டிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி சேகரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.