வேற்றுகிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணப்படாத பறக்கும் பொருட்கள் (UFO) தொடர்பான தகவல்கள் குறித்து முன்கூட்டியே எந்தவொரு முடிவுக்கும் வராமல், திறந்த மனதுடன் ஆராய வேண்டும் என ஆஸ்திரேலிய கிரீன்ஸ் கட்சியின் தலைவர் டேவிட் ஷோபிரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
நேர்காணலொன்றின்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
UFO தொடர்பான பல்வேறு அறிக்கைகள் மற்றும் நேரில் கண்டதாகக் கூறுபவர்களின் சாட்சியங்கள் வெளியாகியுள்ள நிலையில், அவற்றின் அடிப்படையில் பல்வேறு முடிவுகளுக்கு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், கிடைக்கப்பெறும் தகவல்களை ஆராயாமல், அவை நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட விடயம்தான் என உறுதியாகக் கூறுவது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நீண்டகாலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய பசுமைக் கட்சியின் எதிர்கால அரசியல் அணுகுமுறை, பொருளாதார ஏற்றத்தாழ்வு, பெரும் செல்வந்தர்களின் அரசியல் செல்வாக்கு மற்றும் உக்ரைன் போர் தொடர்பான சர்வதேசத் தடைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் அவர் நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வாக்காளர்களுக்கு தமது கொள்கைகளைப் போதிப்பதை விடுத்து, அவர்களின் பிரச்சினைகளையும் எதிர்பார்ப்புகளையும் கட்சி அதிகம் செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீட்டு வாடகை, கடன் சுமை, மின்சாரக் கட்டணம் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு போன்ற அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் கட்சி நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.