ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இன்று (28) மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆளும் தொழிலாளர் கட்சி (Labor Party) கடும் பின்னடைவைச் சந்திக்கக்கூடும் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மோசமான வானிலைக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். தேர்தல் தினத்துக்கு முன்னரே மாநிலத்தின் தகுதிபெற்ற வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாக விக்டோரியா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய பிரதமர் பென் கரோல் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும், எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் ஜெஸ் வில்சன் தலைமையிலான கூட்டணிக்கும் இடையில் முக்கிய போட்டி நிலவுகின்றது.
கடந்த 12 ஆண்டுகளாக விக்டோரியா மாநிலத்தில் ஆட்சியிலுள்ள தொழிலாளர் கட்சி, நான்காவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் போட்டியிடுகின்றது.
எனினும், அண்மையில் வெளியான கருத்துக்கணிப்புகள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு கணிசமான முன்னிலையைக் காண்பித்துள்ளன.
ஹெரால்ட் சன் மற்றும் நியூஸ்24 ஊடகங்களுக்காக நடத்தப்பட்ட YouGov கருத்துக்கணிப்பின்படி, 88 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில் கூட்டணி 55 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒன் நேஷன் கட்சி 12 ஆசனங்களையும், பசுமைக் கட்சி மேலதிக ஆசனங்களையும் பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு கருத்துக்கணிப்பின்படி, இரு பிரதான அணிகளுக்கிடையிலான விருப்புவாக்கு அடிப்படையில் கூட்டணி 57.5 சதவீத ஆதரவையும், தொழிலாளர் கட்சி 42.5 சதவீத ஆதரவையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, தேர்தலில் பசுமைக் கட்சியும் ஒன் நேஷன் கட்சியும் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ளதுடன், அதன் பின்னர் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள போதிலும், இறுதி முடிவுகள் வாக்கு எண்ணிக்கையின் பின்னரே உறுதிப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.