ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத் தேர்தலில் 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதுடன், லிபரல் – தேசியக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
சனிக்கிழமை (28) நடைபெற்ற தேர்தலில், லிபரல் கட்சித் தலைவர் ஜெஸ் வில்சன் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் விக்டோரியா மாநிலத்தின் முதலாவது பெண் பிரீமியராக பொறுப்பேற்கும் வாய்ப்பை ஜெஸ் வில்சன் பெற்றுள்ளார்.
அவர் இதற்கு முன்னர் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தொழிலாளர் கட்சியின் தலைவர் பென் கரோல் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டதுடன், ஜெஸ் வில்சனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்க வகையில், பென் கரோல் தனது சொந்தத் தொகுதியான நிட்ரியில் போட்டியிட்டும் தோல்வியடைந்துள்ளார். இதன் மூலம் விக்டோரியாவின் நவீன அரசியல் வரலாற்றில் தேர்தலில் தனது தொகுதியை இழந்த முதலாவது முதலமைச்சர் என்ற நிலைக்கும் அவர் உள்ளாகியுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் வெளியான கருத்துக்கணிப்புகள் தொழிலாளர் கட்சிக்கு எதிரான வாக்குப் போக்கைக் காட்டியிருந்தன. குறிப்பாக, ஆளும் கட்சியின் 12 ஆண்டுகால ஆட்சி, மாநிலத்தின் அதிகரித்த கடன் சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட விவகாரங்கள் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம்பிடித்திருந்தன.
இதற்கிடையில், வன் நேஷன் கட்சியும் கிரீன்ஸ் கட்சியும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளமை தேர்தலின் மற்றுமொரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
இந்தத் தேர்தல் முடிவின் மூலம் விக்டோரியா மாநிலத்தில் நீண்டகாலமாகத் தொடர்ந்த தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.