குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரிஸ்பேர்னுக்கு மேற்கே அமைந்துள்ள லொக்கையர் பள்ளத்தாக்கின் போஸ்ட்மன்ஸ் ரிட்ஜ் (Postmans Ridge) பகுதியில் இன்று (29) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மர்பிஸ் க்ரீக் வீதியில் பயணித்த மிட்சுபிஷி அவுட்லேண்டர் ரக வாகனம், அதிகாலை சுமார் 3.50 மணியளவில் வீதியை விட்டு விலகி மின்சார உபநிலையம் ஒன்றின் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 18 வயதுடைய இரண்டு இளைஞர்களும், 19 வயதுடைய ஓர் இளைஞரும், 18 வயதுடைய யுவதியொருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வாகனத்தில் சிக்கியிருந்த மற்றுமொரு 18 வயதுடைய யுவதியை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். ஆபத்தான நிலையில் அவர் டூவூம்பா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய ஐவரும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸாரின் தடயவியல் விபத்துப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட குயின்ஸ்லாந்து பொலிஸ் மற்றும் அவசர சேவைகள் அமைச்சர் டான் புர்டி, இளம் உயிர்களின் இழப்பு மிகுந்த வேதனையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நான்கு உயிரிழப்புகளுடன் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்த ஆண்டில் வீதி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270ஐக் கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.