விக்டோரியா மாநிலத் தேர்தலில் வன் நேஷன் கட்சி (One Nation) கணிசமான வாக்குகளைப் பெற்று அரசியல் அரங்கில் தனது செல்வாக்கை அதிகரித்துள்ள போதிலும், கட்சியின் மாநிலத் தலைவர் வாரன் பிக்கரிங் தனது தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
தேர்தலில் 59.7 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டிருந்த நிலையில், வன் நேஷன் கட்சி 20 சதவீதத்துக்கும் அதிகமான முதன்மை வாக்குகளைப் பெற்றிருந்தது. இது தொழிற்கட்சியின் 18.1 சதவீத வாக்குகளைவிட அதிகமாகும்.
எனினும், இந்த வாக்கு அதிகரிப்பு கீழவையில் அதிக ஆசனங்களாக மாறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தலைவருக்குத் தோல்வி
வன் நேஷன் கட்சியின் மாநிலத் தலைவர் வாரன் பிக்கரிங் போட்டியிட்ட பக்கன்ஹாம் (Pakenham) தொகுதியில் லிபரல் கட்சியின் ராட்மிலா டைசன் வெற்றிபெற்றுள்ளார்.
இதனால், வன் நேஷன் கட்சியின் மாநிலத் தலைமைப் பொறுப்பு யாரிடம் செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் துணைத் தலைவியும் முன்னாள் லிபரல் நாடாளுமன்ற உறுப்பினருமான கொலீன் ஹார்கின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று ஆசனங்களைக் கைப்பற்றுமா?
லாரா (Lara), மெல்டன் (Melton), சன்பரி (Sunbury) ஆகிய தொகுதிகளில் வன் நேஷன் கட்சி வெற்றிபெறக்கூடும் என தேர்தல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இந்த மூன்று தொகுதிகளும் முன்னர் தொழிற்கட்சியின் வசமிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கிராமப்புற மற்றும் பிராந்திய விக்டோரியாவில் ஒன் நேஷன் கட்சிக்கான ஆதரவு நகர்ப்புறங்களை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.
கிராமப்புறப் பகுதிகளில் கட்சிக்கு 32.3 சதவீத முதன்மை வாக்குகளும், மெல்பேர்ன் நகர்ப்புறப் பகுதிகளில் 15.7 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசியலிலும் கவனம்
வன் நேஷன் கட்சியின் தலைவர் பொலின் ஹான்சன், விக்டோரியா தேர்தல் முடிவுகள் கட்சியின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஏனைய மாநிலங்களிலும் கட்சியின் ஆதரவு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விக்டோரியாவில் பதிவான இந்த வாக்கு மாற்றம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என கட்சியின் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இறுதி ஆசனப் பகிர்வு மற்றும் கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியுள்ளது.