பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் (UNRWA), தமது நாட்டில் செயற்படுவதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளது. இது தொடர்பான சட்டமூலத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் மேற்படி நிறுவனத்தால் தமது சேவைகளை முன்னெடுக்க முடியாது.
இதனால் மேற்குக் கரை, ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மனிதாபிமான நெருக்கடி ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட
மனிதாபிமான பணியாளர்கள், உயிர்காக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“ இஸ்ரேல்- பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இச்சட்டம் பாதகத்தை ஏற்படுத்தக்கூடும்.” – என்று ஐநா பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டித்துள்ளன.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனமானது உயிர்காக்கும் பணியை செய்கின்றது, எனவே, அதற்கு தடை விதிக்கும் இஸ்ரேலின் தீர்மானத்தை ஆஸ்திரேலியா கடுமையாக எதிர்க்கின்றது என ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.