இஸ்ரேல் இராணுவம் காசாவின்மீது நடத்திய தாக்குதலில், பிறந்து நான்கு நாட்களே ஆன இரட்டை குழந்தைகள் கொல்லப்பட்டுள்ள அதிர்ச்சி செய்தி, கேட்போரின் நெஞ்சங்களை பதைப்பதைக்க வைத்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலால் தற்போது வரை இறந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை என்பது 40 ஆயிரத்தை நெருங்கும் நிலையில், 1 வருட காலமாகியும் தற்போதுவரை போர் நிறுத்ததற்கான அறிகுறியே இல்லை. போரை கைவிடக்கோரி பல்வேறு நாடுகள் வலியுறுத்தியும் தற்போது வரை நின்றபாடில்லை.
காசாவில் வாழ்ந்து வருபவர் முகமது அபுவெல். இவரது மனைவி கருவுற்றிருந்த நிலையில், பாதுகாப்பு கருதி மனைவியோடு இஸ்ரேல் இராணுவத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனது குடும்பத்தோடு டெய்ர்-அல்-பலாவில் உள்ள தற்காலிக வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இவரது மனைவி ஜூமனா அராஃபா, ஒரு மருந்தாளராக இருந்துள்ளார். இந்நிலையில்தான் கடந்த வாரம் இத்தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது என்ற செய்தியை சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்த முகமது அபுவெல்லின் மனைவி ஜூமனா அராஃபாவிற்கு, அடுத்து ஒரு கோர சம்பவம் அரங்கேரப்போகிறது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.
சம்பவத்தின்படி, பிறந்து நான்கு நாளே ஆன, அய்சல் மற்றும் அசர் என்ற தனது குழந்தைகளுக்கு பிறப்புச்சான்றிதழ் பதிவு செய்வதற்காக அரசு அலுவலகத்திற்கு சென்றுள்ளார் முகமது அபுவெல். அப்போது, அலுலகத்தில் வந்த சிலர் முகமது அபுவெல் தங்கியிருந்த டெய்ர்-அல்-பலா என்ற இடத்திற்கு அருகில் இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், பதறிப்போன முகமது அபுவெல், உடனடியாக தனது வீட்டிற்கு சென்று பார்த்தப்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தனது மனைவி, இரட்டைக் குழந்தைகள், மாமியார் என அனைவரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்டோரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, காசாவில் மக்களை பாதுகாப்பதற்கு போர் நிறுத்தமே சிறந்த வழியென ஆஸ்திரேலியா மீண்டும் அறிவித்துள்ளது. உதவிப்பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.