ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள நாட்டுக்கு அழைப்பதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த 15 பேருக்கும் வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் அறிவித்தல் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார சேவையுடன் தொடர்புபடாத பதவிகளில் பணியாற்றிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கிணங்க ஐக்கிய நாடுகள் சபையின் நிவ்யோர்க்கிற்கான வதிவிட பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ், பிரித்தானிய உயர்ஸ்தானிகரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, இந்திய உயர்ஸ்தானிகரான முன்னாள் தூதுவர் ஷெனுகா செனவிரத்ன,
ஆஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரான, வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர,
ஜப்பானுக்கான தூதுவர் ரொட்னி பெரேரா,
மலேசியாவிற்கான உயர்ஸ்தானிகரான முன்னாள் விமானப்படை தளபதி சுமங்கல டயஸ், நேபாளத்திற்கான தூதுவர், முன்னாள் விமானப்படை தளபதி சுதர்ஷன பத்திரன, கியூபாவிற்கான தூதுவர், முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன, பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகர் முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன,
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான தூதுவர் உதய இந்திரரத்ன, கென்யாவிற்கான உயர்ஸ்தானிகர் பி.கனநாதன், ஈரானுக்கான தூதுவர் மொஹமட் ஷாஹிட் ஆகியோர் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜித ஹேரத்தின் ஆலோசனையின் பேரில் வெளிநாட்டு சேவைக்கு பொருத்தமானவர்கள் எதிர்காலத்தில் அந்தந்த பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.