" பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழரசுக் கட்சியுடன் நாம் எவ்வித பேச்சும் நடத்தவில்லை. தனித்து ஆட்சி அமைப்பதற்குரி பெரும்பான்மை பலம் எமக்கு கிடைக்கப்பெறும்." - என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ஜே.வி.பியின் பொதுச்செயலாளருமான ரில்வின் சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ஜனாதிபதி தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவளித்தது. எமக்கு ஆதரவளிக்கவில்லை. இம்முறை அக்கட்சியினர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தல் தொடர்பில் எம்மிடையே இணக்கப்பாடு எதுவும் இல்லை. அது சம்பந்தமாக பேச்சு நடத்தப்படவும் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தலில் சாதாரண பெரும்பான்மையைவிடவும் அதிகமான ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெறும். எனவே, ஆட்சியமைப்பதற்குரிய உதவியை அவர்களிடம் (தமிழரசுக் கட்சி) கோருவதற்குரிய சாத்தியம் எழாது.
எமக்கு நாடாளுமன்றத்தில் பெரும் பலம் தேவையில்லை, அரசாங்கத்தை பலமாக முன்னெடுப்பதற்குரிய பெரும்பான்மை பலம் இருந்தால் போதும்."- என்றார்.