தாய்லாந்து, லாவோசுக்கு சுற்றுலாசென்ற இரு ஆஸ்திரேலிய யுவதிகள் மெத்தனால் கலந்ததாக சந்தேகிக்கப்படும் மதுபானம் அருந்தியதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
மெல்பேர்ணைச் சேர்ந்த 19 வயதான இரு யுவதிகளே இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்டு, அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
கடந்த செவ்வாய்கிழமை இரவு விடுதியொன்றில் மது அருந்திய நிலையில், புதன்கிழமை காலை இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் அருந்திய மதுபான வகை, இரசாயன பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மெத்தனால் திரவ இரசாயனமாகும். சட்டவிரோத மதுபானங்களில் இது சேர்க்கப்படுகின்றது. மெத்தனாலை சிறு அளவு பயன்படுத்துவதுகூட உயிருக்கு ஆபத்தானதாகும்.
பாதிக்கப்பட்டுள்ள இரு யுவதிகளும், மெத்தனால் கலந்த மதுபானத்தை அருந்தி இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்டுள்ள யுவதிகளின் குடும்பத்தாருக்கு தூதரக உதவிகளை வழங்கிவருகின்றது.