தேசிய பாதுகாப்பு சட்டம் ஊடாக சிவில் மற்றும் கருத்து உரிமைகளை நசுக்கும் செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு சீனா மற்றும் ஹாங்கொங் அதிகாரிகளிடம் ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
ஹாங்காங்கின் ஜனநாயக சார்பு முகாமின் பிரமுகர்கள் 14 பேர், தேசிய பாதுகாப்பு வழக்கில் ஹாங்காங் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆஸ்திரேலிய பிரஜையொருவரும் உள்ளடங்குகின்றார்.
சீனாவால் விதிக்கப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குறித்த 47 பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அந்த நடவடிக்கை மிகப்பெரிய ஒடுக்குமுறையாகக் கருதப்பட்ட நிலையில், கடந்த மே 30 ஆம் திகதி குற்றவாளிகளென தீர்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இத்தண்டனை குறித்து ஆஸ்திரேலியா ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய பிரஜைக்குரிய தூதரக உதவிகள் வழங்கப்பட்டன, அவருக்கான உதவிகள் தொடரும் என்று விசேட அறிக்கை ஊடாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் ஹாங்கொங் அதிகாரிகள் மற்றும் சீனாவிடம் ஆஸ்திரேலியா ஏற்கனவே ஆட்சேபனையை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமது நாட்டு பிரஜைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் லிபரல் கட்சியும் கடுமை எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.