ரஷ்யாவுக்குள் ஊடுருவி உக்ரைன் படைகள் அதிரடி தாக்குதல் நடத்திவரும் நிலையில், இத்தாக்குதலுக்காக ஆஸ்திரேலியா வழங்கிய கவச வாகனங்களை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Kursk பிராந்திய எல்லையில் கவச வாகனமொன்று அழிக்கப்பட்டதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் வழங்கிய கவச வாகனங்கள் ரஷ்யா எல்லைக்குள் நுழைந்துள்ளது என ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையிலேயே, விக்டோரியாவில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்களின் பாகங்களைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பு எவ்வித அறிவிப்பையும் இன்னும் வெளியிடவில்லை. எனினும், தமது நாடு வழங்கிய ஆயுதங்களை தற்காப்புக்காக பயன்படுத்தும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது என்று பிரிட்டன் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 6 ஆம் திகதி உக்ரைன் படையினர் ஊடுருவல் தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் அபாயம்மிக்க பகுதிகளில் ரஷ்யா அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.