புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, அவ்வமைப்பின் படங்கள் மற்றும் இலட்சினைகளை பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
வடக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. பாதுகாப்பு தரப்பினர் இதற்கு இடையூறு எதையும் ஏற்படுத்தவில்லை. இது தெரியுமா? அல்லது நினைவேந்தலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
'வடக்காக இருந்தாலும், கிழக்காக இருந்தாலும், தெற்காக இருந்தாலும், மலையகமாக இருந்தாலும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூருவதற்குரிய உரிமை உள்ளது. இதற்கு நாம் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்தவில்லை.
தடைசெய்யப்பட்ட தமது பிள்ளைகளை நினைகூரும்போது அவர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர் எனக் காட்ட முற்படவும்கூடாது.
எனினும், புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். அவ்வமைப்பின் இலட்சினை, படங்களை பயன்படுத்த பயன்படுத்தி மாவீரர் தின நிகழ்வை நடத்த இடமளிக்கமுடியாது." - என்றார்.