சபா.தயாபரன்
ஆஸ்திரேலியாவில் உள்ள பல மாநிலங்களில் அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் அலுவலகங்களுக்கு முன்னால் பல நாட்களாக அகதிக்கோரிக்கையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் .
அந்த வகையில் மெல்பேர்ணில் உள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்தக்கு முன்னால் சுமார் 100 நாட்களாக போராட்டத்தை அகதிகள் முன்னெடுத்திருந்தனர். அவ்வப்போது அமைதி வழிப்போராட்டத்தை குழப்பும் வகையில்’ நியோ நாஜிகள்’ என்று அழைக்கப்படுவோரால் சில விரும்பத்தகாத சம்பவங்களும் இடம்பெற்றன.
திடீரென ஒரு கும்பல் , புகலிடக்கோரிக்கையாளர்களின் 100 ஆவது நாள் பேரணியை அத்துமீறி முற்றுகையிட்டது. கறுப்பு உடை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு தலையில் கம்பளித்தொப்பியை அணிந்து, தங்களை அடையாளம் தெரியாதபடி வந்த 20 பேர் கொண்ட ’நியோ நாஜிகள் ’என்று நம்பப்படும் அந்தக் குழு , புகலிடக்கோரிக்கைளார்களின் போராட்டம் நடக்கும் இடத்தை பலவந்தமாக ஆக்கிரமித்தது.
இனவாத, வெள்ளை மேலாதிக்க துவேச வார்த்தைகள் அவர்கள் வாயில் இருந்து ஆக்ரோஷமாக வெளிவந்தன. பலமாக கோஷங்களை எழுப்பியபடி பேரணியை அவர்கள் குழப்ப முற்பட்டனர். இதனைத் தடுத்த பொலிஸார் அவர்களின் மீது மிளகாய்ப் பொடித் தாக்குதலை நடத்தி விரட்டினர்.
ஆனால் புகலிடக் கோரிக்கையாளர்கள் வன்முறையை விரும்பவில்லை. அவர்களிடம் ஒரு கட்டுப்பாடு உள்ளது. எந்த வகையிலும் தங்கள் சுய கட்டுப்பாட்டை இழந்து வன்முறையில் ஈடுபடக் கூடாது என்கின்ற புகலிடக்கோரிக்கையாளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுதிமொழியே , அந்தச் சம்பவத்தை நிதானமாகக் கையாண்டு, அவர்களை அமைதியாக பயணிக்க வைத்தது. மற்றப்படி அவர்கள் கோழைகள் அல்லர் என்பதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
100 ஆவது நாள் அமைதிப்போராட்டத்தை வழி மறித்து குழ்பபம் விளைவித்த நாஜிகள் அமைப்புக்கு எதிராக விக்டோரிய மாநில நாடாளுமன்றத்தில் அதிர்வலைகள் எழுந்திருந்தன. அது மட்டுமின்றி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்திலும் கண்டனக் குரல்கள் எழுந்திருந்திருந்தன.
விக்டோரியா- என்எஸ்டபிள்யூ எல்லையில் கடந்த ஒக்ரோபர் மாத முற்பகுதியில் சுமார் 50 பேர் அடங்கிய நியோ நாஜிக்கள் ஒன்றுகூடியுள்ளனர் என்றும் வெறுப்பு மற்றும் பிரிவினைக்கு எதிராக ஒன்றுபடுமாறும் விக்டோரியா பிரிமியர் ஜெசிந்தா ஆலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் நியோ நாஜிக்கள் அமைப்பைச் சேர்ந்தோரை வளைத்து பிடித்தி நீதிமன்றில் முற்படுத்தி வருகின்றது பொலிஸ் துறை.அத்துடன் நாஜி வணக்கம் செலுத்தியதாக பல்வேறு சம்பவங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நியோ நாஜி என்றால் என்ன?
நியோ-நாஜி என்பது “புதிய-நாஜி" அல்லது ‘புத்துயிர் பெற்ற நாஜி" என்று பொருள்படும். குறித்த அமைப்பு 1933 மற்றும் 1945 க்கு இடையில் ஜெர்மனியை ஹிட்லரின் நாஜி கட்சின் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டது. ஜெர்மனிய வார்த்தைகளில் ‘தேசிய சோசலிசம்" என்று பொருள்படுகிறது.
இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் அடல்ஃப் ஹிட்லரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது, அவரது புத்தகமான ஆநin முயஅpக ஐப் படிப்பது மற்றும் நாஜி வணக்கம் செலுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். அதனால் அவர்கள் நியோ நாஜிக்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் அனைத்து இனங்களையும் விட வெள்ளையர்களே இன மேன்மையானவர்கள் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். கறுப்பின மக்களும் யூதர்களும் அடிமட்ட மக்கள் என்ற கொள்கையில் உள்ளவர்கள். ஓரினச்சேர்க்கையாளர்கள், ரோமனிய மக்கள் ஆகியோர் மீதும் வெறுப்புணர்வைக் கொண்டவர்கள்.
ஜேர்மனியில் 1930களில் இன ரீதியாக தூய்மையான ஐரோப்பாவே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யூதர்கள் , நாடோடிகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்களைக் கொலை செய்து தூய்மையான “ இரத்தம் மற்றும் மண்” என்ற கொள்கையை உருவாக்கியிருந்தனர்.
ஹிட்லரின் நாஜி முழக்கங்களில் ஒன்றாகக் கருத்ப்படும் "இரத்தமும் மண்ணும்" என்ற வாசகத்தை நியோ நாஜிகள் “இரத்தமும் மரியாதையும்" என்று கோஷமெழுப்பி வருகின்றனர்.
நியோ நாஜிகளின் தலைமை அலுவலகத்தின் ஒரு வெள்ளை அறிவிப்பு பலகையில் யூத இனத்தை அழிப்பது – அமெரிக்கக் கறுப்பின மக்களை அழிப்பது போன்ற வாசகங்கள் காணப்பட்ட என விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலியாவில் தூய்மையான வெள்ளையினக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய சமூகத்தை கட்டியெழுப்பவே இந்த நியோ நாஜி அமைப்பின் ஒரே நோக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு இனமும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தேசத்தில் இருக்கவேண்டும். ஆஸ்திரேலியா வெள்ளையர்களுக்கு மட்டும் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர்.
நாஜி கட்சி மற்றும் ஆஸ்திரேலிய தேசிய சோசலிச வலையமைப்பு ஆகிய இரண்டின் பெயரிலும் "சோசலிசம்" அடங்கியிருந்தாலும், அவர்கள் உண்மையில் "சோசலிசத்தை" பின்பற்றவில்லை, இது பொதுவாக இடதுசாரித் தத்துவமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
அடால்ஃப் ஹிட்லர், “தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர்” கட்சியில் சேர்ந்து அதன் கட்டமைப்பையும் அதன் படையையும் கைப்பற்றி, அதன் மீது தனது இனக்கோட்பாடுகளைத் திணிக்கத் தொடங்கியவர். அதே போன்றே சோசலிசம் என்ற பெயரில் ’தி ஆஸ்திரேலியன் நியோ நாஜிக்களும்’ ஹிட்லரின் நடை முறைகளையே பின்பற்றி வருகின்றனர்.
புலம்பெயர்ந்த சமூகத்தினரால் தங்களது வேலைவாய்ப்புகளோ அல்லது அவர்களால் தாங்கள் இவற்றை இழந்தோம் என்று கருதும் இளைஞர்கள் வயோதிபர்கள் இந்த நியோ நாஜிக்கள் அமைப்பில் இணைகின்றனர். அவர்களின் இழந்த அந்தஸ்தையும் மேன்மையையும் மீட்டெடுக்க போர் செய்ய வேண்டும் என்று உறுதி மொழி வழங்குகிறது இந்த அமைப்பு.
இவர்கள் ஆஸ்திரேலிய சமூகத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்று நாட்டின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர்களின் சித்தாந்தம் பயங்கரவாதத் தாக்குதலைத் தூண்டலாம், பெரும்பாலும் அவர்களின் கருத்துக்கள் மற்றும் வெறுப்புகளால் ஈர்க்கப்பட்ட நபர்கள் "டுழநெ றழடக்" என்ற நடவடிக்கையாக தனித்தனித்தாக்குதல்களை நடத்தலாம் என்ற அச்சத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் மசூதி கொலைகளைச் செய்த ஆஸ்திரேலியரான ப்ரெண்டன் டாரன்ட், நியோ நாஜிகளின் சிந்தாந்தங்களுக்கு உட்பட்டிருந்தார் என்பது விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.
ஜனவரி 8, திங்கட்கிழமை 2024 இல் நடைமுறைக்கு வரும் அல்பானீஸ் அரசாங்கத்தின் முக்கியமான சட்டங்களில் நியோ நாஜி அமைப்புக்கு எதிரான சட்டங்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
இன ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாகவுள்ள வெள்ளை மேலாதிக்கப் பிரசாரத்தை மேற்கொள்ளும் இந்த நவநாஜிக் குழுவினர் மீது கடுமையான சட்ட திட்டங்களை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளுவதன் மூலமே ஆஸ்திரேலிய அரசின் இனச்சார்பற்ற தன்மை வினைத்தன்மை மிக்கதாகக் காப்பாற்றப்படும்.