" பாலி நைன்" என்றழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் எஞ்சிய உறுப்பினர்கள் இந்தோனேசியாவில் இருந்து விரைவில் ஆஸ்திரேலியா திரும்பக்கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது.
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள புதிய இரு தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அவர்கள், நாடு திரும்புகின்றனர்.
குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தோனேசியா சிறைச்சாலைகளில் உள்ள ஆஸ்திரேலிய கைதிகள் நாடு திரும்பவுள்ளனர்.
இது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் டொனி பர்க், இந்தோனேசிய தலைநகரான ஜகர்த்தா சென்றுள்ளார். இந்தோனேசிய நீதி அமைச்சரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது புதிய ஒப்பந்தத்தின் வரைவு நகல் ஆஸ்திரேலிய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
" மேற்படி பிரச்சினைக்கு டிசம்பருக்குள் தீர்வு காண முடியும் என நம்புவதாக" இந்தோனேசிய நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஒப்பந்தம்மூலம் சட்ட சிக்கல்கள் நிவர்த்தி செய்யப்படும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹெரோயின் கடத்த முற்பட்ட ஆஸ்திரேலியர்கள் 2005 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஐவர் தற்போது பாலி சிறைச்சாலையில் உள்ளனர்.
ஆன்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோருக்கு 2015 இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.