ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாடளாவிய ரீதியில் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (4) நடைபெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான உரையின் போது அனுமதி பத்திரம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பித்து, உரையாற்றுகையிலேயே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.
மேற்படி ஆவணங்களின் பிரகாரம் மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும், தென்மாகாணத்தில் 48,வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 அனுமதி பத்திரங்கள் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் மொத்தமாக 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9,மாத்தறை 5,அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை , கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3. புத்தளம் 6, குருநாகல் 8 . பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என்ற அடிப்படையில் மொத்தமாக 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அனுமதி பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை.
2024 ஜனவரி முதல் இவ்வாறு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சி தாவலுக்காக அரசியல் இலஞ்சமாகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பின்னரே அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொண்டவர்களின் பெயர்கள் பார் குமார் என்று பல வடிவங்களில் மாற்றப்பட்டன. குறித்த விபரங்களை நாட்டு மக்களும் இனி தெரிந்துக் கொள்ளலாம்." - எனவும் அவர் கூறினார்.