ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு போதைப்பொருள் கடத்தினார் எனக் கூறப்படும் ஆஸ்திரேலிய பூர்வக்குடி பெண்ணுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டோனா நெல்சன் என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை லேபர் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் ஒன்லைன் காதல் மோசடிக்கு இலக்காகியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. குறித்த சிறைதண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படும் என்று நெல்சனின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
பேர்த்தை சேர்ந்த நெல்சன் 2023 ஆம் ஆண்டிலேயே லாவோஸில் இருந்து டோக்கியோவுக்கு விமானம்மூலம் 2 கிலோ போதைப்பொருளைக் கடத்தியுள்ளார்.
சூட்கேஸில் போதைப்பொருள் இருந்தது தனக்கு தெரியாது எனவும், ஒன்லைன்மூலம் அறிமுகமான நபரொருவரே அதனை வழங்கினார் எனவும் 58 வயதான நெல்சன் ஜப்பான் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் உள்ள தனது ஒன்லைன் காதலனிடம் அதனை ஒப்படைக்குமாறு கூறப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் நெல்சன் டோக்கியோ விமான நிலையம் சென்றபோது காதலன் எனக் கூறப்படும் நபர் அங்கு இருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தல் கும்பலால் இவர் திட்டமிட்ட அடிப்படையில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூர்வக்குடி பெண்ணின் குடும்பத்தாருக்கு தூதரக உதவிகள் வழங்கப்படும் என்று லேபர் அரசு தெரிவித்துள்ளது.