சாலமன் தீவுகள் நாட்டுக்குரிய பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உதவிகளை அதிகரிப்பதற்கு ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது.
பசுபிக் பிராந்தியத்தில் காலூன்றுவதற்கு சாலமன் தீவுகளை மூலோபாயமாக பயன்படுத்துவதற்கு சீனா முயற்சித்துவரும் நிலையில், அதற்கு கடிவாளம் போடும் நகர்வாகவே கன்பராவின் உதவி பார்க்கப்படுகின்றது.
சாலமன் தீவுகளிலுள்ள பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு ஆஸ்திரேலிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஆஸ்திரேலிய தரப்பில் இருந்து தற்போது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
சாலமன் தீவுகள் நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு பங்காளராக ஆஸ்திரேலியாவே உள்ளது. அந்நாட்டில் அடிக்கடி உள்நாட்டு கலவரங்கள் வெடிப்பது வழமை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிராந்திய பாதுகாப்பு கருதி சாலமன் தீவுகள் நாட்டுக்கு பல உதவிகளை ஆஸ்திரேலியா வழங்கிவருகின்றது. இதற்கிடையில் சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு சாலமன் தீவுகள் முயற்சித்தமை பசுபிக் பிராந்தியத்தில் சர்ச்சையை தோற்றுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.