மெல்பேர்ணில் யூத வழிபாட்டுதலம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும், ஐநாவில் ஆஸ்திரேலியா வாக்களித்த விதத்தையும் தொடர்புபடுத்தி இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிலிருந்து இஸ்ரேல் உடன் வெளியேற வேண்டும் எனவும், பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி ஐ.நாவின் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவாக வாக்களித்தது.
இதற்கு இஸ்ரேல் கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த அணுகுமுறை யூத எதிர்ப்பு நடவடிக்கையை ஊக்குவிக்கும் எனவும் இஸ்ரேல் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் மெல்பேர்ணில் உள்ள யூத வழிபாட்டுதலம்மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி இஸ்ரேல் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். யூத வழிபாட்டுதலம்மீதான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் பிரதமர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். யூத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆஸ்திரேலியா முடிவு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.