யூத எதிர்ப்பு சம்பவங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும், அத்தகைய சம்பவங்களை எதிர்த்து போராடவும் Operation Avalite எனும் பெயரில் விசேட செயலணி நிறுவப்படவுள்ளது.
மெல்பேர்ண் யூதவழிபாட்டு தலம்மீதான தீ வைப்பு தாக்குதல் பயங்கரவாத செயல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, பிரதமரால் மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யூத வழிபாட்டு தலம்மீதான தாக்குதல், லேபர் கட்சியின் யூத எம்.பியின் அலுவலகம்மீதான தாக்குதல் உட்பட மூன்று யூத விரோத சம்பவங்கள் மற்றும் அதன் பின்புலம் தொடர்பில் சிறப்பு குழு கூடுதல் அவதானம் செலுத்தவுள்ளது.
மேற்படி சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கு மேற்படி படையணி, பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் என்று பொலிஸ் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மாநில பொலிஸார், பெடரல் பொலிஸாருடன் மேற்படி செயலணி இணைந்து பணியாற்றவுள்ளது.
அதேவேளை யூத வழிபாட்டு தலம்மீதான தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் கடும் அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றார்.
தமது ஆட்சியின்கீழ் யூதர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் அறிவித்து, அதற்குரிய திட்டங்களை வெளியிட்டுள்ளார்.