மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பூர்வக்குடி மக்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் எதிர்ப்பலைகளையும்மீறி, குயின்ஸ்லாந்து அரசாங்கம், சிறார்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளது.
மேக்கிங் குயின்ஸ்லாந்து, பாதுகாப்பு சட்டங்களின் கீழ் புதிய சட்ட ஏற்பாடு அமுலுக்கு வரவுள்ளது.
இச்சட்டத்தின் பிரகாரம் கொலைக்கு கட்டாய ஆயுள் தண்டனை அல்லது 20 ஆண்டுகள் பிணை இல்லாத சிறை தண்டனை விதிக்கப்படக்கூடும்.
முன்னதாக, சிறார்களின் கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையே விதிக்கப்பட்டது.
இவ்வாறான கடுமையான தண்டனை விதிகள் இளம் குற்றவாளிகளால் செய்யப்படும் குற்றங்கள் மீதான சமூகத்தில் ஏற்படும் கோபங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இருப்பதாகவும், அது ஒரு தடுப்பாக செயல்படும் என்றும் அரசாங்கம் நியாயப்படுத்துகிறது.
எனினும், பல வல்லுநர்களின் கூற்றுப்படி கடுமையான தண்டனைகள் சிறார்களால் இழைக்கப்படும் குற்றத்தை குறைக்காது எனவும், மாறாக அதனை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையும் இது தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
குழந்தைகளின் மனித உரிமைகள் தொடர்பான மரபுகளை புறக்கணிப்பதாகவும், சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் புதிய நடவடிக்கை அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.
வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் மேற்படி சட்டமூலத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கீறின்ஸ் கட்சியினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சபா.தயாபரன்.