உக்ரைனுக்கான ஆஸ்திரேலிய உதவிகள் தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், ரஷ்ய, உக்ரைன் போர் தொடர்பில் வாஷிங்டனின் அணுகுமுறை மாறும் எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே எந்த சூழ்நிலையிலும் உக்ரைன் பக்கம் ஆஸ்திரேலியா நிற்கும் என பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு லண்டனில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.
இரு தரப்பு மாநாட்டின் பின்னர் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பாதுகாப்பு அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, உக்ரைனில் அமைதி முயற்சிக்காக ஆஸ்திரேலியா படைகளை அனுப்புமா என எழுப்பட்ட கேள்விக்கு அவர் நேரடி பதிலை வழங்கவில்லை. அதேபோல இதனை நிராகரிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் நேட்டோ சகாக்களுடன் பேச்சு நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் குறிப்பிட்டுள்ளார்.