மெல்பேர்ணில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்ட அப்துல் நாசர் பென்ப்ரிகா என்ற பயங்கரவாதிக்கான அரசாங்க கண்காணிப்பு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறைந்தபட்சம் மேலும் ஒரு மாதமாவது அவர், அரசாங்க கண்காணிப்பின்கீழ் இருப்பார்.
சமூக பாதுகாப்பை கருத்திற்கொண்டே, கண்காணிப்பு உத்தரவு மேலும் அவசியம் என்ற கோரிக்கை விக்டோரிய உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டத்துக்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்கொண்ட பென்ப்ரிகா 2023 ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எனினும், அவர் அரசாங்கத்தின் கண்காணிப்பின்கீழ் இருந்தார். பொலிஸ் கண்காணிப்பு, ஊரடங்கு உத்தரவு என 30 இற்கு மேற்பட்ட கடும் நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டிருந்தன.
அவருக்கான கண்காணிப்பு காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் அதனை நீடிப்பதற்கு சட்டமா அதிபரால் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப்பட்டது.சமூக பாதுகாப்புக்காக இதற்கு அனுமதி வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
நீடிப்புக்கான நியாயமான காரணங்கள் முன்வைக்கப்பட்டதால் கண்காணிப்பு உத்தரவை மேலும் 28 நாட்களுக்கு நீடிப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்தது. 2025 ஜனவரி 16 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு இந்த உத்தரவு காலாவதியாகும்.
2005 ஆம் ஆண்டிலேயே அவர் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்தார் எனக் கூறப்படுகின்றது. தற்போது அவருக்கு 60 வயதாகின்றது.