உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம் அடுத்த மாதம் மீண்டும் திறக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் பெனிவோங் உறுதியளித்துள்ளார்.
உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர், அந்நாட்டு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
2022, பெப்ரவரி மாதம் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடுத்த நாளிலேயே கீவ்வில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு மொரிசன் ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. போலந்து நாட்டில் இருந்து தூதரக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.லேபர் கட்சி ஆட்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
போர் மூண்டு ஈராண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆஸ்திரேலிய இராஜதந்திரியொருவர் தற்போது உக்ரைனுக்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் தூதரகம் அடுத்த மாதம் திறக்கப்படும் எனவும், தூதவர் உள்ளிட்ட பணியாளர்கள் கீவ் வருவார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பை உக்ரைன் வரவேற்றுள்ளது.
அதேவேளை, உக்ரைனுக்கான ஆஸ்திரேலிய உதவிகள் தொடரும் எனவும், வடகொரிய படையினரை ரஷ்யா பயன்படுத்துவது சர்வதேச விதிமீறல் எனவும் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.