பசுபிக் தீவு நாடுகளில் தனது பாதுகாப்பு இருப்பை விஸ்தரிப்பதற்கு சீனா முயற்சித்துவரும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகளை ஆஸ்திரேலியா முன்னெடுத்துவருகின்றது. இதன் ஓர் அங்கமாக சாலமன் தீவுகள் நாட்டில் புதிய பொலிஸ் பயிற்சி நிலையமொன்றை திறக்கவுள்ளது.
இதற்காக 190 மில்லியன் டொலர்கள் முதலிடப்படவுள்ளது. கன்பராவில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பான அறிவித்தலை பிரதமர் வெளியிட்டார்.
தமது நாட்டில் ஏற்படும் கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை உதவிகளை ஆஸ்திரேலியா இரட்டிப்பாக்க வேண்டும் என சாலமன் தீவுகள் கோரிக்கை விடுத்திருந்தது.
இக்கோரிக்கையை ஏற்ற ஆஸ்திரேலியா அதற்குரிய ஏற்பாடுகளை தற்போது முன்னெடுத்துவருகின்றது.
சாலமன் தீவுகளில் சீன அதிகாரிகளும் காவல்துறை பயிற்சிகளை வழங்கிவருகின்றனர். எனினும், தற்போது ஆஸ்திரேலியா செய்துகொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் பிரகாரம் சீனாவால் தனது இருப்பை விஸ்தரிக்க முடியாது.