ஜேர்மனியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் எனக் கருதப்படும் சம்பவத்தில் குறைந்தபட்சம் இருவர் பலியாகியுள்ளனர். 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தை ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் எதிர்வரும் 25 ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக கிறிஸ்தவ மதத்தினர் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி ஜேர்மனி நாட்டின் சண்டோனி அன்ஹட் மாகாணம் மக்டக்பெர்க் நகரின் மையப்பகுதியில் சந்தை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த சந்தையில் நேற்று இரவு குவிந்த மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தேவையான கேக், பரிசுபொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக்கொண்டிருதனர்.அப்போது அங்கு வேகமாக வந்த கார் சந்தைக்குள் புகுந்தது.
மக்கள் கூட்டத்துக்குள் காரை புகுத்தி நடத்தப்பட்ட தாக்குதலாக இது கருதப்படுகின்றது.
சந்தையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் குறைந்தபட்சம் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.
மேலும், கார் விபத்தை ஏற்படுத்திய சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இது பயங்கரவாத தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவத்தை சவூதி அரேபியாவும் கண்டித்துள்ளது.