" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது எமது நாட்டு அரசமைப்பின் ஓர் அங்கமாகும். அது பற்றி புதிதாக பேசுவதற்க எதுவுமில்லை. அதனால் கூட்டறிக்கையில் உள்ளடக்க வேண்டிய தேவைப்பாடு எழவில்லை." என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,
" ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது குறிப்பாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பேசப்பட்ட விடயங்கள் எவை? நாட்டில் முன்னர் இருந்த ஜனாதிபதிகள் இந்தியா விஜயம் மேற்கொள்ளும்போது வெளியிடப்படும் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச்சட்டம் பற்றி கூறப்பட்டிருக்கும்.
எனினும், இம்முறை கூட்டறிக்கையில் 13 பற்றி கூறப்படவில்லை. இதற்கு இலங்கை உடன்படவில்லை என்ற விமர்சனம் உள்ளது.." என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாம் எமது நாட்டின் அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றோம். எமது நாட்டு அரசமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டம் ஓர் அங்கமாக உள்ளது. எனவே, அதனை கூட்டறிக்கையில் உள்ளடக்குவதற்குரிய தேவைப்பாடு எழவில்லை. அது அரசமைப்பில் உள்ள ஒரு விடயம்.
அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். அதற்குரிய சட்டதிருத்த யோசனை ஜனவரி ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். புதிதாக வேட்பு மனு கோரப்படும். தேர்தல் ஆணைக்குழு நிர்ணயிக்கும் நாளில் தேர்தல் நடத்தப்படும்.
அதன்பிறகு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். எல்லை நிர்ணய குழு முன்வைத்த அறிக்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அதற்கும் சட்டத்திருத்தங்கள் அவசியம். அதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். அதன்பிறகு அரசமைப்பின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அந்த விடயத்தை கூட்டறிக்கையில் உள்ளடக்குவதற்குரிய தேவைப்பாடு எழவில்லை." - என்றார்.