உக்ரைன் படைகளுடன் இணைந்து போரிட்ட ஆஸ்திரேலியரை ரஷ்யா கைது செய்துள்ளதை காண்பிக்கும் வகையில் வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் கூட்டாட்சி அரசு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஆஸ்கார் ஜென்கின்ஸ் என தன்னை அடையாளப்படுத்தும் குறித்த நபர், கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை அவரது தோற்றத்திலிருந்து விளங்குகின்றது.
ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவரே மேற்படி காணொளியை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் வீடியோவின் நம்பகத்தன்மை மற்றும் அதில் காண்பிக்கப்படும் நபர் பற்றிய விபரங்கள் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா சில நேரங்களில் தவறான விடயங்களை பகிர்ந்துவருகின்றது. எனினும், இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முயற்சித்து வருகின்றோம் என்று பிரதமர் அந்தோனீ அல்பானீஸி தெரிவித்துள்ளார்.
தன்னை ஆஸ்திரேலியர் எனக் கூறும் 32 வயதான குறித்த நபரிடம், ரஷ்ய மொழியில் கேள்வி கேட்பவர், அவரை தடியால் தாக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
அதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் ரஷ்யாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகமும் அவதானம் செலுத்தியுள்ளது.