தனது ஆன்மீக சொற்பொழிவுகளை செவிமடுக்க வந்தவர்களின் பெண் சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிங்கள வைத்தியருக்கு 10 வருட சிறை தண்டனையை மெல்பேர்ண் நீதிமன்றம் விதித்துள்ளது.
மெல்பேர்ணில் வாழும் இலங்கை வைத்தியரான பிரதீப் திஸாநாயக்க என்பவரே, தன்னை கடவுள் எனக் காண்பித்து ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
மெல்பேர்ணில் தோல் சார்ந்த மருத்துவ நிலையமொன்றை நடத்தி வந்த அவர், 2016 இல் இலங்கை சென்று வந்த பிறகு, ஆன்மீக நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
பௌத்தம் மற்றும் கிறிஸ்தம மதத்தை உள்ளடக்கிய வகையில் ஆன்மீக பிரிவொன்றை ஸ்தாபித்து அதனை அவர் வழிநடத்தி வந்துள்ளார். அதன் கடவுள் அவரே என பக்தர்களை நம்ப வைத்துள்ளார்.
தமது பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் அவர் விதித்துள்ளார். வாழ்க்கை முறைமை எவ்வாறு அமைய வேண்டும் எனவும் வழிகாட்டல்களை வழங்கியுள்ளார். அவரிடம் அனுமதிபெற்றே வாழ்க்கையில் சில விடயங்களை அவரை பின்பற்ற வருபவர்கள் செய்ய வேண்டிய நிலையும் காணப்பட்டுள்ளது.
தன்னை கடவுள் எனக் காண்பித்துக்கொண்ட நபரை பின்பற்ற வந்த இருவரின் மகள்மாரை அவர் பலதடவைகள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.
இக்குற்றத்துக்காக திஸாநாயக்கவுக்கு விக்டோரிய நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த தண்டனை போதாதென சுட்டிக்காட்டி, பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து தண்டனை காலம் 10 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது. எட்டு வருடங்கள்வரை பிணைக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற கட்டளையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.