அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது ஜனாதிபதியாக வாஷிங்டனில் திங்கள்கிழமை பதவியேற்றார்.
இதன்போது தனது முதல் உரையை நிகழ்த்திய ட்ரம்ப் “அமெரிக்காவின் பொற்காலம் இன்று முதல் தொடங்குகிறது." என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா விரைவில் முன்பை விட சிறந்த, வலிமையான நாடாகவும், விதிவிலக்கானதாகவும் மாறும். தேசிய வெற்றியின் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் நான் ஜனாதிபதி பதவிக்குத் திரும்புகிறேன். " எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மாற்றத்தின் அலை வீசுகிறது. இந்த வாய்ப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு ஆஸ்திரேலிய பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் சிறந்த நண்பர் எனவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவு தொடரும் எனவும் அந்தோனீ அல்பானீஸி குறிப்பிட்டுள்ளார்.
சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அல்பானீஸி கூறியுள்ளார்.