ஆஸ்திரேலிய தினத்தன்று, அடிலெய்டிலுள்ள போர் நினைவிடமொன்றில் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் ஒன்றுகூடியதை தெற்கு ஆஸ்திரேலிய பிரீமியர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தேசிய சோசலிச வலயமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மேற்படி குழு, அடிலெய்டி நகர் வழியாக அணிவகுத்து செல்ல முற்படுகையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
16 வயது சிறுவன் ஒருவர் உட்பட மொத்தம் 16 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் நாஜி சின்னத்தை வெளிப்படுத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சோசலிச வலயமைப்பிலுள்ள இந்த நவநாஜி உறுப்பினர்கள் நெடுநாட்கள் பொலிஸாரால் கண்காணிக்கப்பட்டுவந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது.
கறுப்பு ஆடை மற்றும் சன்கிளாஸ் அணிந்து, ஆஸ்திரேலியக் கொடியுடன் இக்குழுவினர் அணிதிரண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.