நிரந்தர விசா இன்றி ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோருக்கு அவர்கள் கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.
தமக்கு நிரந்தர விசா வழங்குமாறு வலியுறுத்தி போராடிவந்த 23 வயதான தமிழ் இளைஞர் ஒருவர், தற்காலை செய்துகொண்டுள்ள பின்னணியிலேயே மேற்படி கடிதம் அனுப்பட்டுள்ளது.
“மனோ யோகலிங்கம்போல் அதே சூழ்நிலையில் இருக்கும் 8,500 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு நிரந்தர விசா அல்லது விரைவான மறு விண்ணப்ப செயல்முறையை வழங்க வேண்டும்.” என்று மேற்படி கடிதம் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், புகலிடக்கோரிக்கையாளர்களின் வாழ்வு இவ்வாறு முடியக்கூடாது எனவும், கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 19,000 அகதிகளுக்கு செய்தது போல், இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை நிரந்தரப் பாதைக்கு அனுமதிப்பதே இதற்குச் சிறந்த வழியாகும் எனவும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மனித உரிமை அமைப்பாளர்கள் மற்றும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் குறித்த கடிதத்தை வரவேற்றுள்ளனர். எனினும், பிரதமர் மற்றும் குடிவரவு அமைச்சர் ஆகியோர் கடிதம் குறித்து தமது பதிலை இன்னும் வழங்கவில்லை.