குயின்ஸ்லாந்து தென்கிழக்கு பகுதியில் 4 வயது சிறுமியொருவரை நெடு நாட்கள் துன்புறுத்திவந்த பெண்ணுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த குறித்த சிறுமியை அதிகாரிகள் கடந்த 9 ஆம் திகதி லோகன் வைத்தியசாலையில் சேர்த்தனர்.
காயம், தீக்காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் என்பவற்றால் குறித்த சிறுமி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து 32 வயதான பெண் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
உடல் ரீதியில் தீங்கு விளைவித்தல், சித்திரவதை உட்பட அவருக்கு எதிராக 29 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் சிறுமியை மறைத்து வைத்திருந்தார் எனவும், பொலிஸாரிடம் சிக்காமல் இருப்பதற்கு பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று தடுத்து வைத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
கைதாகியுள்ள பெண்ணுக்கு பொலிஸ் பிணை மறுக்கப்பட்டுள்ளது. மார்ச் 9 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.