பனிப்போர் காலத்திற்கு பிறகு முதன் முறையாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கிடையில் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து அமெரிக்க பத்திரிகையாளர் உட்பட 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
அத்துடன் , சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு எதிரான அடக்குமுறைகளை புடின் அரசு கைவிட வேண்டும் என்று ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரசை சேர்ந்த சிலரை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
அதேபோல், ரஷியா, பெலாரசில் உளவு, பயங்கரவாதம் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா, ஜெர்மனி, போலாந்து, ஸ்லோவேனியா, நோர்வே போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளன.
இதில் குறிப்பாக, அமெரிக்காவின் பிரபல நாளிதழான தி வால் ஸ்டிரீட் ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் மற்றும் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய பால் வீலன் போன்றோர் ரஷியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ஜெர்மனி தலைநகர் பெர்லினில் 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் ரஷியாவை சேர்ந்த வடிம் ரசிகொவ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ரஷ்ய உளவுத்துறையின் உத்தரவின்பெயரில் இந்த கொலையை அரங்கேற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அவர் ஜெர்மனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல், உளவு பார்த்ததாக ரஷ்யாவை சேர்ந்த 3 பேர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர்கள் எந்த குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று இரு தரப்பும் கூறி வருகின்றன.
அதேவேளை, சிறையில் உள்ள தங்கள் நாடுகளை சேர்ந்த நபர்களை விடுதலை செய்ய அந்தந்த நாடுகள் முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிகளுக்கு அவ்வப்போது பலன் கிடைத்து வருகிறது.
பனிப்போர் காலத்திற்கு பின் முதல் முறையாக அமெரிக்கா – ரஷ்யா இடையே கைதிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன்படி, ரஷ்யா, பெலாரஸ் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்கா, ஜெர்மனி உள்பட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக அமெரிக்கா, ஜெர்மனி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்யா, பெலாரசை சேர்ந்த 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக 26 கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கைதிகள் பரிமாற்றம் துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்றுள்ளது. கைதிகள் பரிமாற்றத்தில் தி வால் ஸ்டிரீட் ஜெர்னலின் செய்தியாளர் இவென் ஜெர்ஷ்வொவிச் , அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் பால் வீலன் , ரஷியாவை சேர்ந்த வடிம் ரசிகொவ் உள்ளிட்டோரும் உள்ளடங்குகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து பின்னர் ரஷ்யா திரும்பினர். அவர்களை ரஷிய ஜனாதிபதி புடின் விமான நிலையத்தில் வரவேற்றார்.
அதேபோல், ரஷியாவில் இருந்து விடுதலை செய்யப்பட்ட கைதிகள் துருக்கியில் இருந்து அமெரிக்கா, ஜெர்மனி சென்றடைந்தனர்.விடுதலையான அமெரிக்கர்களை அமெரிக்க ஜனாதிபதி பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோர் வரவேற்றனர்.
ரஷ்யா மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான பனிப்போருக்கு பிறகு இருதரப்பும் அதிக எண்ணிக்கையிலான கைதிகளை பரிமாறிக்கொள்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.