ஆஸ்திரேலியா தமது நாட்டு வான் பரப்புக்குள்
ஊடுருவி தேசிய பாதுகாப்பை குறைமதிப்புக்கு உட்படுத்தியுள்ளது என சீனா தெரிவித்துள்ளது.
தென்சீனக் கடல்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த தமது நாட்டு விமானம்மீது, சீனாவின் போர் விமானம் தீப்பொறிகளை வீசி, அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா குற்றஞ்சாட்டி இருந்தது.
சர்வதேச விதிமுறைகளுக்கமையவே கண்காணிப்பு பணி இடம்பெற்றதாக சுட்டிக்காட்டி, இச்சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியா, சீனாவிடம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையிலேயே அனுமதியின்றி வேண்டுமென்றே ஆஸ்திரேலியா இராணுவ விமானம் தமது நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
அத்துமீறி நுழைந்த விமானத்தை வெளியேற்ற சட்டப்பூர்வமான தொழில் முறைமையையே சீனா பின்பற்றியது என வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஆஸ்திரேலியாவிடம் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், சீனாவின் இறையாண்மை மற்றும் தென்சீனக் கடல் பகுதியில் ஸ்தீரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்படக்கூடாது எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.