நியூ சவூத் வேல்ஸ் மாநில லிபரல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோரி அமோன், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.
சிட்னி வடக்கு கடற்கரை பகுதியில் 2017 ஆம் ஆண்டு தனக்கு தெரிந்த சிறுவன் ஒருவரை இவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இக்குற்றச்சாட்டு உட்பட அவருக்கு எதிராக 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் 35 வயதான குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார்.
தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரோரி அமோன் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது.
அத்துடன், வெளிநாடு செல்லத் தடை உட்பட கடும் நிபந்தனைகளுடன் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.