ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சீன படையினரின் பயிற்சிகள் தொடரும் - என்று ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் சியாவோ கியா தெரிவித்தார்.
சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அமையவே சீனா பயிற்சி மேற்கொள்கின்றது எனவும், இது தொடர்பில் ஆஸ்திரேலியாவிடம் மன்னிப்பு கோர வேண்டிய தேவைப்பாடு கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆஸ்திரேலியாவுக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் சீனாவின் 3 போர்க்கப்பல்கள் பிரவேசித்துள்ள விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேற்படி மூன்று கப்பல்களுக்கு மேலதிகமாக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலொன்று ஆஸியின் பொருளாதார மண்டலத்துக்கு அருகில் வந்து சென்றிருக்கலாம் எனவும் தகவல் வெளியானது.
சீனாவின் போர்க்கப்பல்கள் தொடர்பில் ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை செலுத்தியதுடன், துப்பாக்கிச்சூட்டு பயிற்சியில் ஈடுபட்டமை தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இரு நாடுகளும் மூலோபாய பங்காளிகளாக இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு சீனா ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது எனவும் சீனத் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கூட்டாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளக அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலா இந்த கப்பல்கள் அனுப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு பதிலளித்த சீனத் தூதுவர், வெளிநாட்டு ஜனநாயக செயல்முறைகளில் சீன தலையிடுவதில்லை என குறிப்பிட்டார்.