தமது நாட்டிலுள்ள ஆஸ்திரேலிய தூதுவருக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சு அழைப்பாணை விடுத்துள்ளது.
அரச கொள்கைக்கு முரணான இன்ஸ்ராகிராம் பதிவு தொடர்பில் விளக்கம் கோருவதற்காகவே தூதுவர் அழைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
தன்பாலின ஈர்ப்பு நடவடிக்கை ஈரானில் சட்டவிரோத நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதுகூட மரணதண்டனை விதிக்ககூடிய குற்றமாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில் தன்பாலின நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய தூதரகத்தின் இன்ஸ்ராகிராம் பதிவு அமைந்துள்ளது என ஈரான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தமது நாட்டு அரச கொள்கைக்கு முரணானது என்பதாலேயே தூதுவர் ஈரான் அதிகாரிகளால் விளக்கம்கோர அழைக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய தூதரகத்தின் இடுகை இஸ்லாமிய பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்கு எதிரானது எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் இந்த நடவடிக்கை தொடர்பில் ஆஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் தன்பாலின நடவடிக்கை சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.