ரஷ்யாவின் அச்சுறுத்தல்களுக்கு ஆஸ்திரேலியா ஒருபோதும் அடிபணியாது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் சூளுரைத்துள்ளார்.
உக்ரைனில் அமைதி காக்கும் படைக்கு, ஆஸ்திரேலியாவும் படைகளை அனுப்பினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய தூதுரம் எச்சரித்துள்ள நிலையிலேயே, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டால் உக்ரைன் பாதுகாப்புக்காக அங்கு அமைதி காக்கும் படைகளை நிலைநிறுத்துவதற்கு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து என்பன திட்டமிட்டுள்ளன. இது தொடர்பான கூட்டணியில் இணைவதற்கு ஆஸ்திரேலியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்ய தரப்பில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கலக நாடுகளின் காலணித்துவ திட்டத்தை ஏற்க தாம் தயாரில்லை என கன்பராவிலுள்ள ரஷ்ய தூதரம் அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
அமைதி காக்கும் பணிகளுக்கு 80 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா பங்களிப்பு வழங்கிவருகின்றது எனவும், உக்ரைனுக்கு அமைதி படையை அனுப்புவது பற்றி இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன்மீதான சட்டவிரோத போரை ரஷ்யா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ள பெனி வோங், உக்ரைன் மக்களுக்கு அமைதியை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் ரஷ்யாவுக்கு அஞ்சப்போவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.