தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகம் நிதியுதவி வழங்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொய்யான கூற்றுகளை வெளியிட்டதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பேரணியில், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துக்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அனுராதபுரத்தில் செப்ரெம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன பேரணியின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை, பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்குமாறு காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
பேரணியின் போது கூறப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.