சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
சிவராசா அனோஜனின் நிலைமை தொடர்பில் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த அவரின் பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாநாயக, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்வதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சும் சிவராசா அனோஜன் தொடர்பான சம்பவம் குறித்து சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகள் ஊடாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது தெரிவித்தார்.
சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.