வடக்கில் பௌத்த தலங்கள் இந்து மயப்படுத்தப்பட்டுவருவதாகவும், திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் பாடசாலை மாணவர்களும் பங்கேற்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு
“வடக்கில் பௌத்த தலங்கள் இந்து மயமாக்கப்பட்டுவருகின்றது. தேவநம்பிய திஸ்ஸ நிர்மாணித்த யாழ். திஸ்ஸ விகாரைக்குகூட இன்று சிங்கள மக்களால் செல்ல முடியாதுள்ளது.
திலீபனுக்கு நினைவேந்தல் நடத்துவதற்கு இடமளித்துவிட்டு, கடைசி நாளில் சென்று சிலையை பொலிஸார் அகற்றுகின்றனர். அதனை பாதுகாப்பாக வைத்து, அடுத்த வருடம் கையளிப்பதற்குதான் பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்போலும்…
தமிழர்களின் கலாசார தலைவர்களை நினைவுகூர இடமளிக்கப்பட்டுள்ளது என ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளனது. லெப்டினன் கேர்ணல் திலீபன் கலாசார தலைவரா? அவர் என்ன பரதநாட்டியமா ஆடினார்?
திலீபனை நினைவுகூர பாடசாலை மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதற்கு எதிராக கல்வி அமைச்சு நடவடிக்கை எடுப்பதில்லை. சிறார்களின் மனங்களில் பிரிவினைவாதம் விதைக்கப்படுகின்றது. திலீபன் நினைவு கூரப்படுகின்றார். சலே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.” – என்றார் விமல் வீரவன்ச.