யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 8ஆம் திகதி வியாழக்கிழமை வரையான மூன்று நாள்களும், ஒன்பது அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் இடம்பெற்றது.
இந்த ஊடக விவரிப்பில்,பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும் கலைப்பீடாதிபதியுமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, பல்கலைக்கழகப் பதிவாளர் வி.காண்டீபன், கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீடுகள் கிளையின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எஸ். கே. பிரபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பட்டதாரிகள் எண்ணிக்கை: - இப்பட்டமளிப்பு விழாவில் 14 பீடங்களைச் சேர்ந்த 314 உயர் பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2,680 உள்வாரி மாணவர்களுக்கும், 417 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
விருதுகள் மற்றும் பதக்கங்கள்: - கற்கை நெறிகளில் சிறப்புத் திறமை காட்டிய மாணவர்களுக்கு 100 தங்கப்பதக்கங்கள், 63 பரிசில்கள் மற்றும் 15 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
சிறப்புத் தங்கப்பதக்கங்கள்: -பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான 'பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப் பதக்கங்கள்' மற்றும் 'பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப் பதக்கம்' ஆகிய சிறப்பு விருதுகளும் தகுதியான மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
சிறப்பு நிகழ்வுகள்: - பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து அக்டோபர் 10 அன்று கலை கலாசார நிகழ்வுகளும், அக்டோபர் 15ஆம் திகதி சேர். பொன். இராமநாதன் மற்றும் சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரைகளும் கைலாசபதி கலையரங்கில் இடம்பெறவுள்ளன.