விளையாட்டு விழாவில் இடம்பெற்ற வினோத உடைப் போட்டியில், செம்மணியில் இடம்பெற்ற அவலத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வேடமணிந்து கலந்துகொண்ட சிறுவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு அழைத்து விசாரித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று புனித பிலிப்பு நேரியார் ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இந்த விளையாட்டு விழாவின் வினோத உடைப் போட்டியில் கலந்துகொண்ட ஒரு சிறுவன், கடந்த காலத்தில் செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற மனிதப் புதைகுழி மற்றும் படுகொலைச் சம்பவங்களைச் சித்தரிக்கும் வகையில் புதையுண்ட சிறுவனாகக் காட்சிப்படுத்தியிருந்தான்.
இந்தச் சம்பவம் தொடர்பில் தீவிர கவனம் செலுத்திய மருதங்கேணிப் பொலிஸார், மேற்படி சிறுவனின் பெற்றோரை இன்றைய தினம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.