செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
செம்மணி மனித எச்சங்கள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்னமும் முழுமைபெறாத சூழலில், அது குறித்து அரசு எவ்வித நேர்மையான அக்கறையுமின்றிப் பணிகளைக் காலதாமதம் செய்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன:-
"2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026ஆம் ஆண்டிலும் 110 நாள்களாக செம்மணி - சித்துப்பாத்தியில் பல மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து 583 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இந்த அகழ்வுப் பணி இன்னமும் முழுமைபெறவில்லை. இலங்கையில் இதுவரை பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், செம்மணிப் புதைகுழியே மிகப்பெரிய மனிதப் புதைகுழியாகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கிருஷாந்தி படுகொலை விவகாரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணிப் பகுதியில் 400 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும், அந்த இடங்களைத் தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அன்றே கூறியிருந்தார்.
ஆனால், அப்போதிருந்த சந்திரிகா அரசோ அல்லது அதன் பின்னர் வந்த அரசுகளோ அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சித்துப்பாத்திப் பகுதியில் கட்டடக் குழி தோண்டியபோதே இந்த மாபெரும் மனிதப் புதைகுழி உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த அறிக்கையில், இயற்கை இடர்பாட்டினால் அல்லது தொற்றுநோயினால் நிகழ்ந்த இறப்புகள் காரணமாக இப்புதைகுழிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் நிபுணரான அவருக்கு யாழ். மாவட்டத்தில் சுனாமிக்குப் பின்னரோ அல்லது விடுதலைப்புலிகளின் காலத்துக்குப் பின்னரோ பாரிய பெருந்தொற்றுகளோ ஏற்படவில்லை என்பது தெரியும்.
சுனாமியால் இறந்தவர்கள் கடற்கரைப் பகுதிகளிலேயே புதைக்கப்பட்டு நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டன. தமிழ் மக்கள் இயற்கை மரணங்களையோ அல்லது தொற்றுநோய் மரணங்களையோ தழுவினால் இறுதிச் சடங்குகளின் பின் தகனம் செய்வார்களே தவிர, செம்மணியில் கொண்டுவந்து புதைக்க மாட்டார்கள். மேலும் செம்மணிப் பகுதி கிறிஸ்தவ மயானமும் அல்ல.
அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் வெட்டுக் காயங்களும் சித்திரவதைகளுக்கான தடயங்களும் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. போர்க் காலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசும், படையினரையும் முந்தைய ஆட்சியாளர்களையும் காப்பாற்றுவதிலேயே மும்முரமாக உள்ளது.
எனவே, சர்வதேச விசாரணையின் மூலமாகவே செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கான நீதி சாத்தியமாகும் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்." - என்று அந்த அறிக்கையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.